January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் க.பொ.த சாதாரண தர,உயர்தர மாணவர்களுக்கு 750,000 தடுப்பூசிகள் தேவைப்படுகிறது’

இலங்கையில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தர வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு கிட்டத்தட்ட 750,000 தடுப்பூசிகள் தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பல நாடுகள் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளன. இருப்பினும், 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலங்கை முன்னுரிமை அளிப்பதால், பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் தற்போதைக்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறுகையில்;

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக சுகாதார அமைச்சகத்திடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்தவொரு உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

ஆனால் இந்த விடயத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுள்ளோம். இப்போதைக்கு, அரசாங்கத்தின் திட்டத்தின்படி, 30 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு
தடுப்பூசி போடப்படுவதற்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு கிட்டத்தட்ட 400,000 தடுப்பூசிகள் தேவைப்படும் அதேவேளை, க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கிட்டத்தட்ட 350,000 தடுப்பூசிகள் தேவைப்படுகிறது.ஆகவே மொத்தமாக சுமார் 750,000 தடுப்பூசிகள் தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும்,ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான தடுப்பூசி திட்டம் திட்டமிட்டபடி ஆரம்பமாகும் என்று கூறிய பேராசிரியர் பெரேரா, தடுப்பூசி பற்றாக்குறைதான் அரசாங்கத்தை பின்வாங்க வைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.