July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் 4 மாவட்டங்களில் ‘டெல்டா’ வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்!

இலங்கையின் 4 மாவட்டங்களில் ‘டெல்டா’ (பி .1.617.2 டெல்டா) வைரஸின் புதிய வகை இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ துறையின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் கொழும்பு, திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தியதில் “டெல்டா” தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்னார்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவு இலங்கையில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட 123 பேரின் மாதிரிகளின் மரபணு வரிசைமுறை குறித்த அறிக்கையை சர்வதேச வலைத்தளமான nextstrain.org க்கு சமர்ப்பித்துள்ளது.

குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாட்டில் பரவல் அடைந்துள்ள 1.1.7. ஆல்பா வைரஸ் பல பகுதிகளிலும் இன்னும் பதிவாகி வருவதாக ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மேற்கொண்ட மரபணு சோதனையில் கொழும்பு தெமட்டகொட பகுதியில் டெல்டா கொவிட் வகையால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட கொலன்னாவை மற்றும் அங்கொடவிலும் “டெல்டா” வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

இந்த மரபணு சோதனையின் முழு அறிக்கையும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ  துறையின் பணிப்பாளரான வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.