தமிழகமும் புலம்பெயர் சமூகமும் ஒன்றிணைந்தால் அரசாங்கத்தை பல்வேறு விடயங்களிலும் தடுத்து நிறுத்தலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்தைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தாம் அனைவரையும் அரவணைத்துப் போகின்ற நிலைமையைக் கையாளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் காணிப் பிரச்சினை, மாகாண சபைகள், இனம் சார்ந்த பூர்வீகத்தை உடைத்தெறிந்து, வரலாற்றை சிதைக்கின்ற செயற்பாடுகளை நிறுத்துவதற்கான பலத்தை உருவாக்குவதற்கு பலமான சக்தியாக தமிழ்த் தரப்பு இருக்கவேண்டும் என்ற விடயம் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
“புலம்பெயர்ந்த உறவுகளையும், தமிழ்நாட்டு தமிழர்களையும் இணைத்து செயற்படும் போது தமிழ்த் தரப்புக்கு பெரும் பலத்தை பெறுகின்ற வாய்ப்பு ஏற்படும்” என்றும் அடைக்கலநாதன் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.