கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கும் தடுப்பூசியின் முதலாவது டோஸ் மட்டும் போட்டுக் கொண்டவர்களுக்கும் டெல்டா வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் என ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் பணிப்பாளரான வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
நாட்டின் அதிகளவான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வரை சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைப்பிடிப்பது அவசியம் எனவும் அவர் கூறினார்.
வைரஸின் அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை, சமூகத்திலிருந்து டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான பலர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஜீவந்தர சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இதுவரை, 12 இலட்சத்து 6 ஆயிரத்து 499 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தொற்று நோயியல் பிரிவின் அறிக்கை தெரிவிக்கின்றது.இது மொத்த சனத் தொகையின் 4.9% என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் 92 நாடுகளில் டெல்டா வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு பிரதான வைரஸ் தொற்றாக உலகளவில் தீவிரமடைந்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.