ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ஆறு ஊடக அமைப்புகள் ஒன்றிணைந்து பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு கடிதமொன்றை அனுப்பி, முறையிட்டுள்ளன.
ஊடகவியலாளர் தரிந்து பேஸ்புக்கில் பகிர்ந்த செய்தியொன்று தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன், அவரது பேஸ்புக் ஊடாக அச்சுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவுக்கு பேஸ்புக் மூலம் விடுத்துள்ள மறைமுக அச்சுறுத்தல் தொடர்பில் ஊடக அமைப்புக்களின் கவலை வெளியிட்டுள்ளன.
“ஊடகவியலாளர் தரிந்து பொய்யான செய்தியினை வெளியிட்டதாகவும், அதற்கு இயற்கை தண்டனையளிக்கும் எனவும் பிரபாகரன் மற்றும் ஏனைய குற்றவாளிகளுக்கு என்ன நடந்தது என்பதை அவதானிக்குமாறும்” தேஷபந்து தென்னகோன் பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
‘கடந்த 2021 ஜூன் 29 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன எழுப்பிய கேள்வியொன்றுக்கு ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அளித்த பதிலே குறித்த செய்தியின் மூலமாகும்.’
இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை ஒன்றினை முன்னெடுத்து, ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் ஊடக அமைப்புகள் கோரியுள்ளன.
ஊடக சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம், சுதந்திர ஊடக அமைப்பு, இலங்கை தொழிற்சார் ஊடகவியலாளர்களின் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் ஆகியன பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளன.