பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கில் நாடளாவிய ரீதியில் இணைய வசதிகளுடன் கூடிய 2000 இடங்கள் நிறுவப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
மஹிந்தோதய தொழில்நுட்ப கூடங்கள், பள்ளிகள், கோயில்கள் மற்றும் சமூக அரங்குகள் அருகே இதுபோன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு இணைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்கள் பாடசாலை மாணவர்களின் பாவனைக்காக அடுத்த திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
மாவட்ட மேம்பாட்டு குழுக்களின் தலைவர்கள், கல்வி வலயங்களுக்கான பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் இந்த இடங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நீண்ட நாட்களாக பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இணைய வழி தொழில்நுட்பங்களின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.
எனினும் நாட்டின் பல பாகங்களிலும் இணைய வசதிகளை பெற்றுக் கொள்வதில் மாணவர் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றி சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.