கொரோனா வைரஸின் புதியவகையான டெல்டா திரிபு இலங்கையில் பரவியிருந்தாலும் அது சமூக பரவலாக மாறியுள்ளமைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
டெல்டா திரிபு நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக பொது சுகாதார பரிசோதர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“நாட்டில் டெல்டா வைரஸ் சமூக பரவல் அடைந்துள்ளதா என்பதை அறிய சுகாதார அமைச்சு ஒவ்வொரு மாவட்டத்திலும் பிசிஆர் சோதனைகளை மேற்கொண்டுவருகிறது. நாங்கள் இந்த சூழ்நிலையை இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை.” என பிரதி சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் டெல்டா வைரஸ் இனங்காணும் மரபணு பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அது தொடர்பான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.
தற்போது அமுலில் உள்ள சுகாதார கட்டுப்பாடுகள் மூலம் தொற்றுப்பரவலை தொடர்ந்து பராமரிக்க முடியும் என சுகாதார அமைச்சு கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.