November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சேருவில பிரதேச சபையின் அதிகாரத்தை இழந்தது ஐதேக

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழிருந்த சேருவில பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது.

கடந்த 7 மாதங்களாக இயங்காத நிலையிலிருந்த சபைக்கு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய புதிய தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான பிரேரணை இன்று  முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன் போது சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டபிள்யூ.ஏ.ஜயசிறி, மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.

இதன்படி சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி இழந்துள்ளது.

மொத்தம் 15 உறுப்பினர்களைத் கொண்ட இந்த சபையில் ஐக்கிய தேசியக் கட்சி 6 உறுப்பினர்களையும் பொதுஜன பெரமுன 4 உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 3 உறுப்பினர்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தலா ஒரு உறுப்பினரையும் கொண்டிருந்தன.

அதன்படி இன்றைய வாக்கெடுப்பின் போது புதிய தவிசாளருக்கு ஆதரவாக, 9 வாக்குகளும் எதிராக 6 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்களும் சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த ஒருவரும் டபிள்யூ.ஏ.ஜயசிறிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 5 உறுப்பினர்களும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர்.