
இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீளத் திறப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது.
இதன்படி முதற்கட்டமாக நூறுக்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை ஜுலை மாதத்திற்குள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது இது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டதாக, கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள 10,165 பாடசாலைகளில் நூறுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள 2962 பாடசாலைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், இந்தப் பாடசாலைகளை சுகாதாரத் துறையினரின் அனுமதியுடன் முதலில் திறக்க எதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.
நாட்டின் ஏனைய பாடசாலைகள் கட்டம் கட்டமாக சுகாதார விதிமுறைகளுக்கு அமையத் திறக்கப்பட உள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்த தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.