இலங்கையில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ்கள் மூன்று கரடியனாறு பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை தும்பாலஞ்சோலை இராணுவ முகாம் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த பஸ்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலிருந்து நான்கு மாகாணங்களைக்கடந்து கொழும்புக்குக்குச் சென்று திரும்பிவரும் வழியில் பாதுகாப்புத் தரப்பினரால் சோதனையிடப்பட்டபோது அவர்களிடம் விசேட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் வழிதட அனுமதிப் பத்திரம் எதுவும் இருக்கவில்லையென தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், குறித்த பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பஸ்களில் 49 பயணிகள் இருந்துள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த நிலையில், அந்த பஸ்களில் பயணித்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3 பயணிகளும், அந்த பஸ்ஸில் வந்த 17 பேரையும் கரடியனாறு கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த பஸ்களிலிருந்த ஏனைய பயணிகள் அன்டிஜன் பரிசோதனையையடுத்து வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.