வார இறுதி நாட்களில் சுகாதார ஒழுங்கு விதிமுறைகளை மீறி செயற்படும் நபர்களை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின்படி திரையரங்குகள், விடுதிகள், கேளிக்கை நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் பிற பொதுக்கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனவே சுகாதார அதிகாரிகள் பிறப்பிக்கும் சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கோரிக்பை விடுத்துள்ளார்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவு மூலம் தகவல்களை சேகரிக்குமாறும் பொலிஸ் நிலையங்கள் கேட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பொதுமக்களை வீட்டுக்குள் தங்கியிருந்து தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் கம்பளையைச் சேர்ந்த 64 பேரும், கண்டியை சேர்ந்த 61 பேரும் உள்ளடங்குகின்றனர்.
அதற்கமைய கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய 46,260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.