July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டீ.ஏ.ராஜபக்‌ஷ அருங்காட்சியக வழக்கில் இருந்து 6 பேர் விடுதலை

டீ.ஏ.ராஜபக்‌ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகம் தொடர்பான வழக்கில் இருந்து காணி மறுசீரமைப்பு திணைக்களத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்ஷான் டி சில்வா உள்ளிட்ட 6 பேர் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலப்பகுதியில் தங்காலை – வீரகெட்டிய, மெதமுலனவில் டீ.ஏ.ராஜபக்‌ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக காணி மறுசீரமைப்பு கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 34 மில்லியன் ரூபா நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் கடந்த நல்லாட்சி காலப்பகுதியில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட 7 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

எனினும் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு 2019 இல் நீதிமன்றம் நடவடிக்கையெடுத்திருந்தது.

இந்நிலையில் மற்றைய 6 பேர் தொடர்பான வழக்கு நீதியரசர்களான சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொடவத்த மற்றும் நாமல் பலல்லே ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, 2017 ஜுலை 13 ஆம் திகதியளவில் டீ.ஏ.ராஜபக்‌ஷ நிதியத்தினால் குறித்த வேலைத்திட்டத்திற்கான நிதி முழுமையாக செலுத்தப்பட்டிருந்ததாக காணி மறுசீரமைப்பு திணைக்களத்தின் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் பிரதிவாதிகள் 6 பேரையம் வழங்கில் இருந்து விடுதலை செய்வதாக அறிவித்துள்ளனர்.