வட மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கல்விக்கான சம வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக தெரிவித்து, இலங்கை ஆசிரியர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
கொவிட் தொற்று நிலைமையால் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கையில் மாணவர்களுக்கு இணையம் ஊடாக கற்கை நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்ற போதும், வடக்கு மாகாணத்தில் உள்ள மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு சமமாக கிடைக்கவில்லை என்று ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக 60 வீதமான மாணவர்கள் அந்த வாய்ப்பை இழந்துள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த சங்கம் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒருவருட காலமாக கொவிட் நிலைமை தொடரும் நிலையில் மத்திய கல்வி அமைச்சும் வடமாகாண கல்வி அமைச்சும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று ஆசிரியர் சங்கத்தினர் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் பாரபட்சமின்றி அனைத்து மாணவர்களினதும் கல்வி உரிமையை பாதுகாக்க நடவடிக்கையெடுக்குமாறு அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.