பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் நல்லிணக்கத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை விளக்கமளித்துள்ளது.
இதன்படி தற்போதுள்ள சட்டங்கள், கடந்தகால நடைமுறைகள் மற்றும் சர்வதேச நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்தல் மற்றும் 1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஜுன் 25 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவிக்கப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்து அது தொடர்பான அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை துணைக்குழு மற்றும் அதிகாரிகள் குழுவை நியமிக்கவென ஜூன் 21ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற மற்றும் தண்டனை அனுபவித்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 16 பேருக்கு, அரசியலமைப்பின் 34வது பிரிவின் படி ஜூன் 24ஆந் திகதி ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெளிவுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போதைய நல்லிணக்க வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இழப்பீட்டு அலுவலகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விளக்கமளிக்கும் குறித்த கலந்துரையாடலின் போது, ஜீஎஸ்பி வரிச் சலுகை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.