July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சவால்கள் ஏற்பட்டாலும் இலங்கையுடனான ஒற்றுமை மேலும் வலுப்படுத்தப்படும்; சீன தூதரகம்

சீன கம்யூனிஸ்ட் கட்சி தோற்றம் பெற்ற கடந்த 100 வருட காலத்தில் சுதந்திரத்திற்காகவும் இறையாண்மைக்காகவும் போராடிய தருணங்களிலும் ஒற்றுமையையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட சந்தர்ப்பங்களிலும் சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் பக்கபலமாகவும் செயற்பட்டு வந்துள்ளன. தற்போதும் பல்வேறு சவால்கள் காணப்படும் நிலையிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமை மேலும் வலுப்படுத்தப்படும் என்று சீனத் தூதரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சீன கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி உதயமானது. ஆரம்பத்தில் சுமார் 50 உறுப்பினர்களைக் கொண்டிருந்த அந்தக் கட்சி கடந்த நூறு ஆண்டுகளில் சுமார் 91 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அது மாத்திரமன்றி உலகின் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் பெருமளவில் பங்களிப்பு செய்யக்கூடிய நாடாக சீனா சிறந்த முறையில் வழிநடத்திச் செல்கின்றது.

கடந்த 100 வருட காலத்தில் சுதந்திரத்திற்காகவும் இறையாண்மைக்காகவும் போராடிய தருணங்களிலும் ஒற்றுமையையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட சந்தர்ப்பங்களிலும் சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் பக்கபலமாகவும் துணை நின்று செயற்பட்டு வந்துள்ளன. தற்போது பல்வேறு சவால்கள் காணப்பட்டாலும், அதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமை மேலும் வலுப்படுத்தப்படும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைத்திருப்பும் சீன – இலங்கை நட்புறவும் நெடுங்காலத்திற்கு தொடரவேண்டும் என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.