
யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்கான ஒருவரின் துண்டிக்கப்பட்ட கை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்களினால் வெற்றிகரமாக மீளப் பொருத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்ட சத்திரசிகிச்சை ஒன்பது மணித்தியாலங்கள் தொடர்ந்துள்ளது.
ஒட்டுறுப்பு சத்திரசிகிச்சை (Plastic Surgery) நிபுணர் இளஞ்செழிய பல்லவன் தலைமையில் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் பொன்னம்பலம் ஆதித்தன், மயக்க மருந்து மருத்துவ நிபுணர் மற்றும் மருத்துவர்கள் தாதியர்கள் என கூட்டு சேவையினால் கை துண்டாடப்பட்டவருக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இதன்போது, இளைஞர் ஒருவர் தனது கை துண்டாடப்பட்ட நிலையில் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு உடனடியாக சத்திரச் சிகிச்சையை முன்னெடுத்து அதனை வெற்றிகரமாக மருத்துவர்கள் நிறைவு செய்தனர்.