July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா நெருக்கடி காலத்தில் இலங்கையில் சிறுவர் தொழிலாளர்கள் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் சிறுவர்களை பல்வேறு தொழில் துறைகளில் வேலைக்கு அமர்த்துவது அதிகரித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, சிறுவர்களை தொழில்களில் ஈடுபடுத்துவது மற்றும் சிறுவர் கடத்தலை முற்றிலுமாக தடை செய்வதற்கான சட்டங்கள் இயற்றப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதற்காக சிறுவர் மற்றும் தொழிலாளர் சட்ட ஒழுங்கு முறைகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக பெண்கள், இளைஞர் மற்றும் சிறுவர்கள் வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் ஆபத்தான தொழில் விதிமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த சட்டத்தில் மேற்கொள்ள  வேண்டிய திருத்தங்களுக்கான யோசனைகளை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

சிறுவர் தொழிலாளர்களே பெற்றோரின் வறுமைக்கு காரணம் என்று சிலர் விளக்கினாலும், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது மற்றும் பணம் சம்பாதிப்பதற்கு அவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டவிரோதமானது என்றும், போதை பழக்கத்திற்கு அடிமையான பெற்றோர்கள் இந்த குற்றத்தை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அமைச்சர் கூறினார்.

அத்துடன், பண மோசடிக்கு தமது குழந்தைகளை பயன்படுத்துபவர்களை கைது செய்து வழக்கு தொடர வேண்டும் என்றும், வீதிகளில் சுற்றி திரியும் இவ்வாறான சிறுவர்கள் மீது வழக்கமான சோதனைகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

தொழில் துறை அமைச்சில் நேற்று (30) நடைபெற்ற கலந்துரையாடலில் வைத்தே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்தார்.