January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் டெல்டா வகை வைரஸ் பரவும் அபாயம்’

நாடு முழுவதும் டெல்டா வகை கொரோனா தொற்று பரவுவதற்கான அபாயம் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

டெல்டா மாறுபாடான தொற்று இலங்கையில் பரவியிருப்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

நாடளாவிய ரீதியில் பூகோள மட்டத்தில் எத்தனை பேருக்கு இந்த திரிபடைந்த தொற்று ஏற்பட்டிருக்கின்றது என்பது பற்றிய பரிசோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே சில தொற்றாளர்கள் இந்த டெல்டா மாறுபாடான தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த வகையில் அவர்களைத் தவிர வேறு நபர்களுக்கு  தொற்று ஏற்பட்டிருப்பதற்கான எந்த உறுதிப்படுத்தக்கூடிய தகவலும் இதுவரை சுகாதார அமைச்சுக்கு கிடைக்கவில்லை.

இருந்த போதிலும் நாடு முழுவதிலும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துக்கிடமான நபர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துதல் என பல்வேறு முயற்சிகளை நாங்கள் நடத்தி வருகின்றோம்.

இந்நிலையில், நாடு முழுவதிலும் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதா? இல்லையா? என்பது குறித்து அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும்.

ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு காரணமாகவே தற்போது நாளாந்த கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை விட  குறைந்திருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.