January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒழுங்கு விதிகளை மீறும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பணிப்புரை

இலங்கையில் ஒழுங்கு விதிகளை மீறி, குற்றச் செயல்களில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மாத்திரம் இன்றி, அவர்களைக் கண்காணிக்கும் உயர் அதிகாரிகளுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக் காலமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரின் முறைகேடான செயற்பாடுகளால், பொலிஸாரின் நற்பெயர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நெலுவ பொலிஸ் நிலையத்தில் சிறுமி ஒன்றை துஷ்பிரயோகம் செய்த சம்பவம், பொலிஸார் பஸ் வண்டியில் எரிபொருள் திருடிய சம்பவம், வரகாபொலையில் இடம்பெற்ற சம்பவம் போன்றவற்றுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் சில பொலிஸ் அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகளால் முழு பொலிஸ் சேவையிலும் பொதுமக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படும் என்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.