நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாள் சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் அறிவித்தலை தொடர்ந்து, அந்த சம்பளத்தை பெற வேண்டுமாயின் நாளொன்றுக்கு 18 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்று தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலையிலேயே இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
”கடந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 13 கிலோ பச்சை கொழுந்தே பறித்தோம். அதற்கு மேலதிகமாக பறிக்கும் ஒவ்வொரு கிலோவிற்கும் 40 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வந்தது. எங்களது தொழிற்சங்கம் அறிவித்தமைக்கு அமைய மேலதிகமாக 2 கிலோவை பறித்துக்கொடுக்க முடியும். ஆனால் 18 கிலோ வேண்டுமென்று தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுக்கின்றது.” என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியே சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.