
கொழும்பு, கல்கிசை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளம் ஊடாக பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்து துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் மேலும் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இதன்படி குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 21 பேரை கைது செய்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்று கைதான சந்தேக நபர்களிடையே மிஹிந்தலை பிரதேச சபையின் உபதலைவரும், வர்த்தகர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கைதாகியுள்ள சந்தேக நபர்கள் இன்றைய தினத்தில் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஊடாக விளம்பரம் செய்து அந்தச் சிறுமியை பாலியல் செயற்பாடுகளுக்காக 10 ஆயிரம் ரூபா முதல் 30 ஆயிரம் ரூபா வரையான பணத்திற்கு விற்பனை செய்து வந்துள்ளதாகவும், இவ்வாறாக மூன்று மாத காலமாக இவர்கள் இந்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைக்கமைய இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிறுமியின் தாய், சிறுமியை விற்பனை செய்த நபரின் காதலி, சிறுமியை ஒவ்வொரு இடங்களுக்கும் அழைத்துச் சென்ற முச்சக்கர வண்டி சாரதிகள் இருவர், இணையத்தில் விளம்பரம் செய்வதற்கான விளம்பரத்தை தயாரித்த நபர், சிறுமியை கொள்வனவு செய்தவர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.