January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின்னேரிய சம்பவம் தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவர் கைது!

வனவிலங்குத் திணைக்கள அதிகாரியை தாக்கி அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், இராணுவ மேஜர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஜுன் 23 ஆம் திகதி இரவு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கடமையில் இருந்தவேளையில், அனுமதியின்றி மின்னேரிய தேசிய வனப் பகுதிக்குள் நுழைந்த இரண்டு இராணுவ வாகனங்களை ஆய்வு செய்தபோது இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலையொன்று ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தரப்பினராலும், இராணுவத் தரப்பினராலும் ஹபரண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கு விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரி உள்ளிட்ட ஏனையோரை கைது செய்யுமாறு கெக்கிராவ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, குறித்த இராணுவ அதிகாரி ஹபரன பொலிஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜராகியதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, குறித்த சம்பவம் தொடர்பிலான உண்மையான விடயங்களை அறிவதற்கும், அது தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிகைகளை முன்னெடுப்பதற்கும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் சிரேஷ்ட மேஜர் ஜெனரல்கள் இருவர் அடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விசாரணைகளுக்கு அவசியமான தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் விசாரணை குழுவினால் திரட்டப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான அறிக்கை விரைவில் இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.