
ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு பதிலாக, அவர்களை பாதுகாத்து இந்த தொற்று நிலைமைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அனைத்து தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை ஆடை பிராண்ட்ஸ் சங்கம் மற்றும் இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் ஆகியன எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வங்கிக் கடன் நிவாரணம் பெற்றுக்கொள்ளல், ஆடைத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றல், கொவிட் வழிகாட்டுதல்களுக்கு அமைய ஆடை விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி பெறல், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி தொடர்பான பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட்-19 காரணமாக 24 மாத காலமாக தமது வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல நிதி அமைச்சின் ஊடாக அவசர நிவாரணங்களை வழங்குமாறும் ஆடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வர்த்தக நடவடிக்;கைகளை முன்னெடுத்து, ஊழியர்களை தொடர்ந்து சேவையில் ஈடுபடுத்துவது மிகவும் கடினமானதாக உள்ளமையால் அவர்களை பணிநீக்கம் செய்வதை தவிர மாற்று வழி இல்லை எனத் தெரிவித்த வர்த்தக பிரதிநிதிகள் அவ்வாறு ஊழியர்களை நீக்குவதும் கடினமானதொரு செயற்பாடாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது, ஊழியர்களை பணிநீக்கம் செய்யாது, பாதுகாக்கும்படி வர்த்தகர்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி செயற்பாட்டிற்காக தனியான அமைச்சு அறிமுகப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை ஆடை பிராண்டஸ் சங்கம் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளது.