File Photo
இலங்கை முழுவதும் அரச வைத்தியசாலைகளில் தாதிமார்கள் சுகயீன விடுமுறைப் போரட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 8 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் 48 மணித்தியாலங்களுக்கு தொடரும் என்று அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பிரதான தாதியர் சங்கங்களான அரச சேவைக்கான ஐக்கிய தாதியர் சங்கம், அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம், அகில இலங்கை தாதியர் சங்கம் ஆகியன இந்தப் போராட்டத்தில் இணைந்துள்ளன.
2015 ஆம் ஆண்டில் தாதியருக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 15,000 ரூபா போக்குவரத்து மற்றும் விபத்துக்கான கொடுப்பனவை பெற்றுக் கொள்ளுதல், பதவியுயர்வுகள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் தாதியர் பயிற்சிக் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக தரமுயர்த்துதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கடந்த காலங்களில் கலந்துரையாடிய போதும், இதுவரையில் தீர்வுகளை முன்வைக்காத காரணத்தினாலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
முன்னறிவித்தல் இன்றியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதால், சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு சென்ற நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.