இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸான ‘டெல்டா’ இலங்கையில் மேலும் பரவக்கூடிய அபாயம் இருக்கின்றது என எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில்,இலங்கையில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதா? இல்லையா? என்கின்ற தீர்மானம் அடுத்த வாரத்தில் எடுக்கப்படலாம் என்று சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“டெல்டா மாறுபாடான தொற்று இலங்கையில் பரவியிருப்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
நாடளாவிய ரீதியில் பூகோள மட்டத்தில் எத்தனை பேருக்கு இந்தத் திரிபடைந்த தொற்று ஏற்பட்டிருக்கின்றது என்பது பற்றிய பரிசோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே சில தொற்றாளர்கள் இந்த ‘டெல்டா’மாறுபாடான தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்தவகையில் அவர்களை தவிர வேறு நபர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பதற்கான எந்த உறுதிபடுத்தக்கூடிய தகவலும் இதுவரை சுகாதார அமைச்சுக்கு கிடைக்கவில்லை.
இருந்த போதிலும் நாடு முழுவதும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துக்கிடமான நபர்களிடம் பரிசோதனை நடத்துதல் எனப் பல்வேறு முயற்சிகளை நாங்கள் நடத்தி வருகின்றோம்.
இந்நிலையில், நாடு முழுவதிலும் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதா? இல்லையா? என்பது குறித்து அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும்.
ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு காரணமாகவே தற்போது நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை விடக் குறைந்திருக்கின்றது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.