இலங்கையில் கோதுமை மா விலையின் உயர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாண் ராத்தல் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இரண்டு முக்கிய மா இறக்குமதியாளர்களில் ஒருவர் கோதுமை மாவின் கிலோ ஒன்றுக்கான விலையை 18 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து குறித்த நிறுவனத்திடமிருந்து கோதுமை மா கொள்வனவு செய்து வந்த பேக்கரி உரிமையாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக ஜெயவர்தன குறிப்பிட்டார்.
அத்தோடு, நாட்டின் ஏனைய மா இறக்குமதி நிறுவனங்களும் தாம் கொள்வனவு செய்யும் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க அனுமதி கோரியுள்ள போதிலும் நுகர்வோர் விவகார அதிகார சபை இதுவரை அனுமதி வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்த விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாவிட்டால், அதிகரிக்கும் கோதுமை மாவின் விலைக்கு ஏற்ப பாண் ராத்தலின் விலையை 10 ரூபாவால் உயர்த்துவதை தவிர பேக்கரி உரிமையாளர்களுக்கு வேறு வழியில்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.
எனினும் பாண் ராத்தலின் விலையை அதிகரிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன கூறியுள்ளார்.