January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மரண தண்டனை கைதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது

மஹர, வெலிக்கடை சிறைச்சாலைகளில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறைக் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மரண தண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதை அடுத்து தமது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி கைதிகள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரே இவ்வாறு கடந்த 5 நாட்களாக கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சிறைச்சாலை இராஜாங்க அமைச்சின் செயலாளர் கைதிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலை தொடர்ந்து கைதிகள் போராட்டத்தை  கைவிட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே, மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு 10 வருடங்களுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் 260 கைதிகளின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர் வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.