July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மீண்டுமொரு கொரோனா அலை ஏற்படாதென சான்றிதழ் வழங்க முடியாது’: சுகாதார பிரிவு

நாட்டில் கொவிட்-19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாகவோ அல்லது டெல்டா வைரஸ் பரவல் எதிர்காலத்தில் இருக்காது என்றோ சுகாதார பணியகத்தால் சான்றிதழ் வழங்க முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இலங்கையில் மீண்டுமொரு கொவிட் அலை உருவாகக் கூடும் என்று வைத்திய நிபுணர்கள் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுப்பதை கவனத்தில்கொள்ள வேண்டும் என பிரதி சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில், டெல்டா வைரஸ் தொற்று பரவல் குறித்து அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய நாடுகளில் கொரோனா தீவிர அச்சுறுத்தல் இருக்கின்ற காரணத்தினால், இலங்கை பாதுகாப்பான நிலையில் உள்ளதென உறுதியாக கூற முடியாது என்றும் மக்கள் வைத்திய நிபுணர்களின் தொடர்ச்சியான எச்சரிக்கையை கருத்தில்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மக்களின் சுகாதார வழிமுறைகளை பொறுத்தே கொரோனா பரவலின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் என்றும் மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதாரப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.