January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணை தொடர்பில் ஆராய தீர்மானம்’: அமைச்சர் டக்ளஸ்

சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து, இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, கௌதாரிமுனை பிரதேசத்தில் சீன நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே, கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“கடந்த 2017 ஆம் ஆண்டு காலப் பகுதியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருந்த அரசாங்கத்தின் அனுமதிகளுடன் குறித்த சீன நிறுவனம், அரியாலைப் பகுதியில் தனியார் காணி ஒன்றினைக் குத்தகைக்கு பெற்று, கடலட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையம் ஒன்றினை ஆரம்பித்திருந்தது.

பின்னர், அரியாலை கடல் பிரதேசத்தில் கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலைத்தினையும் அமைத்து செயற்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது கௌதாரிமுனையில் கடலட்டை பண்ணை ஒன்றினையும் அமைத்துள்ளார்கள்.” என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

சீன நிறுவனத்திற்கான அனுமதிகள் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்தினால் வழங்கப்படடுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வெளயிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகள் தொடர்பாக ஆராய்ந்து, பூரண அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.

தான் விரைவில் குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக பயணம் செய்து, பிரதேச கடற்றொழிலாளர் சங்கம் உட்பட சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி, சீன நிறுவனம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.