
இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளில் சீனா ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் சீன நிறுவனமொன்றால் அமைக்கப்பட்டுள்ள கடல் அட்டை பண்ணையை பார்வையிடுவதற்காக அங்கு சென்றிருந்த போதே சிறீதரன் எம்பி இவ்வாறு கூறியுள்ளார்.
ஏற்கனவே இலங்கையின் தென் பகுதியிலே கால் வைத்துள்ள சீனா தற்போது வடக்கிலும் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி கௌதாரிமுனை மீனவர்கள் கடலட்டை வளர்ப்பிற்கான முன் வைத்த கோரிக்கைகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, சீனர்கள் இங்கு கடலட்டை பண்ணையை நடத்தி வருகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள சிறீதரன் எம்பி, இதனை பார்க்கும்போது சீனாவிற்கு கடல் அட்டை ஏற்றுமதி செய்யும் இடமாக இது விளங்கினாலும் இதற்குப் பின்னால் அரசியல் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறான விடயம் ஈழத்தமிழர்களுக்கு மாத்திரம் அல்லாது அண்மையில் உள்ள இந்தியாவிற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் மற்றும் இந்தியாவை கண்காணிக்கும் செயற்பாடுகளை சீனா முன்னெடுத்து வருகின்றது. அதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பினை வழங்குகின்றது என கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குறித்த கடலட்டை பண்ணை தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் சிறீதரன் எம்பி தெரிவித்துள்ளார்.