
மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் ஓர் அங்கமாக நாவலப்பிட்டிய நகரிலும் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறும், விவசாயிகளுக்கு உரம் வழங்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தும் விதமாக இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.
கொரோனா, பயணக் கட்டுப்பாடு போன்ற விடயங்களால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விலை அதிகரிப்பு ‘மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டுவது போன்றதாகும்’ என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாற்று வழிகளை அறிமுகப்படுத்தாமல் இரசாயன உரப் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.