January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் பாரிய அரச எதிர்ப்பு அலையொன்று உருவாகியுள்ளது’: சுமந்திரன் எம்.பி.

ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்கான உரையின் பின்னர் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை முழுமையாக இல்லாது போயுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் காரணமாக நாட்டில் பாரிய அரச எதிர்ப்பு அலையொன்று உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தவறுகளை திருத்திக்கொள்ளவில்லை என்றால், ஏனைய சக்திகளுடன் இணைந்து ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் நேரடியான போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றும் அதனைத் தவிர நாட்டு மக்களைப் பாதுகாக்க மாற்றுவழி கிடையாது எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாடு பலவிதமான நெருக்கடிகளை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றது. நாட்டில் தற்போது ‘பொசிடிவ்’ஆக இருப்பது கொவிட் ஒன்று மட்டுமே. ஏனைய சகல விடயங்களும் நெருக்கடியில் உள்ளது.

அரசாங்கம் நாட்டின் நிலைமைகளை சரியாக கையாள முடியாது, பலவீனமுற்றுள்ளமை தெளிவாகிறது.

ஆனால், கொவிட்- 19 வைரஸ் பரவலை சாட்டாக வைத்துக்கொண்டு அரசாங்கம், அதன் இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதை கைவிடுவதாக தெரியவில்லை” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் தொல்லியல் பகுதிகள் என்ற பெயரில் வழமையை விடவும் வேகமாக நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றதாகவும் சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.