“அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அரச தரப்பினர் உள்ளிட்ட அரசியல் வாதிகளை கேட்டுக்கொள்கின்றேன். அதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் விரைவில் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எமது நல்லாட்சி அரசில் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்தோம். அவர்களில் பலருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தியிருந்தோம்.எனினும், இறுதியில் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாத துரதிஷ்ட நிலைமை ஏற்பட்டது.
நல்லாட்சி அரசுக்குள் இருந்த முரண்பாடுகள் மற்றும் அன்று எதிரணிப் பக்கம் இருந்த மஹிந்த ராஜபக்ச அணியினரின் எதிர்ப்புக்கள் காரணமாக அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைத்திருந்தால் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்திருப்போம். தேர்தல் காலங்களில் இந்த வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கியிருந்தோம்.
தமக்கு விசுவாசமான மரண தண்டனைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் விரைவில் விடுதலை செய்ய வேண்டும்”என்று அவர் மேலும் தெரிவித்தார்.