November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கில் சீன தொழிலாளர்கள்; சுமந்திரனின் கருத்துக்கு சீன தூதரகம் பதில்

வடக்கில் சீன பிரஜைகள் பணிக்கமர்த்தப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்த கருத்துக்கு மறுப்பு வெளியிட்டிருக்கிறது இலங்கைக்கான சீன தூதரகம்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செவ்வாய்கிழமை (29) அவரது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவொன்றைச் செய்திருந்தார்.

‘பருத்தித்துறைக்கு 9 கிலோமீற்றர் தொலைவிலுள்ள குடத்தனையில் உள்ள எனது வீட்டிற்கு அருகாமையில், பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்பு பணிகளில் சீன பிரஜையொருவர் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி,வாழ்வாதாரத்திற்காக திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், உள்நாட்டவர்களை ஏன் பணிக்கமர்த்த முடியாதுள்ளது?’ என்று அந்த ருவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்தோடு கடந்த ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, வீதி புனரமைப்பு பணியில் ஈடுபடும் சீன பிரஜையின் முக ஜாடையை ஒத்த ஒருவரின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்நிலையில், சில மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் ஒரு பதிவைச் செய்த சுமந்திரன், ‘ஏற்கனவே நான் செய்துள்ள பதிவில் குறிப்பிட்டிருக்கும் நபர் சீன பிரஜை அல்ல. மாறாக அவர் இலங்கைப் பிரஜை என்ற விடயம் எனது அவதானத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்ற தவறுக்காக நான் வருந்துகின்றேன். எனினும் அண்மைய எதிர்காலத்தில் வடக்கில் பணிபுரியும் உண்மையான சீன பிரஜையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்வேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சுமந்திரன் இரண்டாவதாகச் செய்த ருவிட்டர் பதிவை மேற்கோள்காட்டி இலங்கையிலுள்ள சீன தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறது.

‘வணக்கம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே’, கடந்த 2020 ஆம் ஆண்டில் சீனாவின் தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி 10,484 அமெரிக்க டொலர் ஆகும். அது மாத்திரன்றி வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு அல்லது மூன்று மடங்கான ஊதியத்தைப் பெறுகின்றார்கள் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.

மேலும் ‘சீன கம்பனிகள் பெருமளவிற்கு உள்நாட்டு தொழிலாளர்களையே பணிக்கமர்த்துகின்றன. இல்லாவிட்டால் இலாபமீட்ட முடியாது. ஆகவே நீங்கள் வேறு ஏதேனும் நாடு தொடர்பில் கவலையடைவது பொருத்தமாக இருக்கும்’ என்றும் சீன தூதரகம் அதன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறது.