யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கலந்துகொண்ட காரணத்தால், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் அந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
திலீபன் நினைவேந்தல் மீதான தடை உள்ளிட்ட புதிய அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்குடன் வடக்கு கிழக்கில் இணைந்து செயற்பட்டுவரும் தமிழ்க் கட்சிகள் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று காலை மீண்டும் கூடியிருந்தன.
இந்தக் கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முதற்தடவையாக வந்திருந்திருந்தார். சுமந்திரனின் வருகையை அவதானித்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் அனந்தி சசிதரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தார்.
கடந்த காலங்களில் சுமந்திரனுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் கலந்துகொள்ள விரும்பவில்லை என்று அனந்தி சசிதரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அனந்தி சசிதரன் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் சுமந்திரன் தரப்பின் கருத்துக்கள் கிடைக்கப்பெறவில்லை.
இதனிடையே, சுமந்திரனின் வருகையை முன்கூட்டியே அறிந்துகொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாணசபை தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்றைய கலந்து கொண்டிருந்தனர்.
ஒத்த கருத்துள்ள தமிழ்க் கட்சிகள் தனியான ஒரு அமைப்பாக செயற்படுவது தொடர்பிலும், 20வது திருத்தச் சட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடு தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.