October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையின் திஸ்ஸமஹாராமையில் சீன இராணுவத்தினர் இருக்கவில்லை’: சிஐடி விசாரணையில் தகவல்

இலங்கையின் திஸ்ஸமஹாராமையில் சீன இராணுவத்தினர் இருக்கவில்லை என்பது குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையில் உறுதியாகியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை திஸ்ஸ குள தூர்வாரும் வேலையில் சீன இராணுவ சீருடையணிந்தவர்கள் ஈடுபடுவதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில், குளத்தின் அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதோடு, சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளையும் ஆரம்பித்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் அங்கு சீன இராணுவம் வேலையில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன இராணுவம் அதுபோன்ற சீருடை அணிவதில்லை என்றும் சீனாவில் உள்ள தனியார் பாதுகாப்பு முகவர்கள் இதனை ஒத்த சீருடை அணிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன இராணுவ சீருடை தொடர்பாக சிலர் தனிப்பட்ட இலாபங்களுக்காக சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.