வடக்கில் வீதி புனரமைப்புப் பணியில் சீனப் பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் குறிப்பிடப்பட்ட நபர் சீனப் பிரஜை அல்லவென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்புப் பணியில் சீனப் பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் டுவிட்டரில் படமொன்று பதிவேற்றப்பட்டிருந்தது.
அதில் யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் திண்டாடுகின்ற நிலையில், அவர்களுக்கு ஏன் இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை எனக் கேள்வியையும் சுமந்திரன் எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் சுமந்திரனின் அந்தப் பதிவு குறித்து டுவிட்டரில் பதிலளித்துள்ள பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் சீனப் பிரஜை அல்ல எனவும், அவர் இலங்கையை சேர்ந்த இஸ்லாமிய சகோதரர் என்றும் கூறியுள்ளார்.
”அவருடைய பெயர் மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹனிஃபா. அக்கரைப்பற்றைச் சேர்ந்த அவர் குடத்தனையில் திருமணம் செய்து, அம்பனில் குடியேறியுள்ளார். வீதித் திட்ட ஒப்பந்தக்காரரான என். எம் நிர்மாண பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிகின்றார்” என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள சுமந்திரன் எம்.பி, “இந்த நபர் சீன நாட்டவர் அல்லர். இலங்கையர் என்பது எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பிழைக்கு வருந்துகின்றேன். எதிர்காலத்தில் வடக்கில் பணிபுரியும் பிற உண்மையான சீனர்களின் படங்கள் இடுகையிடப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.