
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் விசா வழங்கும் செயன்முறை தொடர்பாக, தற்போதுள்ள விசா செல்லுபடியாகும் காலத்தை திருத்தம் செய்வதற்கும், குடிவரவு குடியகல்வு சட்டத்தை திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை ஒன்றுகூடலில் இவ்விடயத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் குடிவரவு குடியகல்வு சட்டத்தை திருத்தும் யோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.
விசாவுக்கான காலப்பகுதியை திருத்தம் செய்வதற்காக குடிவரவு குடியகல்வு சட்டத்தை திருத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சராக, ஜனாதிபதி அமைச்சரவைக்கு குறித்த யோசனையை முன்வைத்துள்ளார்.
குறித்த சட்டமூலம் தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து மேலும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் இருப்பின் அது தொடர்பாக அமைச்சரவைக்கு கருத்துக்களை முன்வைக்குமாறு 2021 ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதிய அமைச்சரவைக் கூட்டத்தில் நீதி அமைச்சர் வேண்டியிருந்தார்.
இதற்கமைய, குறித்த தரப்பினருடன் நீதி அமைச்சர் கலந்துரையாடியுள்ளதுடன், சட்டமூலத்தை இருக்கும் விதத்திலேயே பாராளுமன்றத்தால் நிறைவேற்றுவது சிறந்தது என அமைச்சரவைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிந்துரைகளைக் கருத்தில்கொண்டு குடிவரவு குடியகல்வு சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.