தமது கோரிக்கைகளுக்கு நாளைய தினத்திற்குள் தீர்வுகளை முன்வைக்காவிட்டால் நாடுபூராகவும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி வரும் என்று அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரச வைத்தியசாலைகளில் தாதிமார் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் 8 அம்ச கோரிக்கைகளை சுகாதார அமைச்சுக்கு முன்வைத்துள்ளதாகவும், ஆனால் இதுவரையில் அவற்றுக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை என்றும் அந்த சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதனால் நாளைய தினம் வரையில் அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்குவதாகவும், அதற்குள் தீர்வுகளை முன்வைக்காவிட்டால் முன்னறிவித்தல் எதுவும் இன்றி தொழிற்சங்கப் போராட்டத்திற்கு செல்வோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி தாதிமார் உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் கடந்த வாரத்தில் நாடு பூராகவும் வைத்தியசாலைகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.