
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆராயவென தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய திட்டமிடல் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது பிரதமரிடம் தெளிவுபடுத்திய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, 2020-2024 இற்கான தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய திட்டமிடலுக்கு அமைய தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வது அவசியமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலுக்கான வைப்புத் தொகையில் திருத்தங்களை மேற்கொள்ளல், தேர்தல் இடம்பெறும் தினத்தில் வாக்களிப்பதற்கு முடியாத நபர்களுக்கு அதற்கு முன்னதாக ஒரு தினத்தில் வாக்களிக்க வாய்ப்பளித்தல், 18 வயது பூரணமானவர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக் கொடுக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பிரஜைகளுக்கும் இங்கு நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக முன்வைக்கப்படும் யோசனைகள் குறித்தும் அவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்போது, தொடர்ந்தும் பதிலளித்த பிரதமர் வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்க தெரிவுக்குழு ஒன்றை அமைக்க ஆலோசிக்கப்படும் என்றார்.