Photo Facebook/srilankaBIA
கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்க இலங்கை சிவில் விமானச் சேவைகள் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
இதன்படி ஜுலை முதலாம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் வகையில் கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 நாட்களுக்குள் குறித்த நாடுகளில் தங்கியிருந்தவர் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிவில் விமானச் சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் வேறு நாடுகளில் இருந்து குறித்த நாடுகளின் ஊடாக இலங்கை வரும் பயணிகளுக்கு இந்தத் தடை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முதலாம் திகதி முதல் தென் ஆபிரிக்க நாடுகள் உள்ளிட்ட மேலும் 8 நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கை வருவதற்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.