November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாத்தறையில் உள்ள கொரோனா வாட்டுக்குள் நுழைந்த தெரு நாய் 3 பெண்களை கடித்துக் குதறியது

தெரு நாயொன்று, கொரோனா தொற்றாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் மருத்துவமனையின் வாட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த தொற்றாளர்களை கடித்து குதறிய சம்பவமொன்று மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தால் அந்த வைத்தியசாலையே அல்லோல கல்லோலப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை – மொரவக, கொஸ்நில்கொட அரச மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்துக்குள்ளே புகுந்த தெரு நாய், மூன்று பெண்களை கடித்துள்ளது.

அத்துடன், நாய், வாட்டுக்குள் புகுந்ததையடுத்து, சில தொற்றாளர்கள் கட்டில்களுக்கு மேலே ஏறி, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தமிட்டுள்ளனர்.

அந்த சிகிச்சை நிலையத்தில், வெளிநாடுகளிலிருந்து வந்த பெண்கள் 18 பேர் உட்பட, 38 பேர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

அதில் சிலர், தங்கியிருந்து சிகிச்சைகளை முடிந்து கொண்டு வீடுகளுக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்துள்ளனர்.

எனினும், அங்கு கடமையிலிருந்த மருத்துவமனை பணியாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில், அந்நாயை, வாட்டுக்குள்ளிருந்து விரட்டியடித்துள்ளனர்.

அங்கிருந்து வீதிக்கு நாய் ஓடியதை அடுத்து, அங்கிருந்த சிலர் நாயை அடித்துக் கொன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையின் வாட்டுக்குள் எவ்வாறு அந்த நாய் நுழைந்தது என்பது தொடர்பில் யாருக்கும் தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், குறித்த தெரு நாய் பைத்தியம் பிடித்தது என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.