ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற வர வேண்டுமென்று இம்முறை தாம் முன்வைக்கும் கோரிக்கையை அவரால் நிராகரிக்க முடியாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கு நீங்கள் ஏன் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுகிறீர்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசமிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுன கட்சியை ஆட்சிபீடம் ஏறச்செய்வதில் பெரும் பங்காற்றியதாகவும், அவர் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என சாகர காரியவசம் பதிலளித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு அவசியமான தருணத்தில் பெரும் பங்களிப்புகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களிடையே ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பசில் பாராளுமன்றம் வருவதானால் தமது ஆசனத்தை விட்டுத் தருவதாக கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.