November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு ஜூலை முதல் புதிய ஒழுங்கு விதிகள்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு ஜூலை மாதம் முதல் புதிய ஒழுங்கு விதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் இலங்கையர்கள், வணிக பயணிகள், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வதிவிட விசா பெற்றவர்களுக்கு புதிய பயண ஒழுங்கு விதிகள் அமுலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய ஒழுங்கு விதிகள் 1 மாத காலத்துக்கு பின்பற்றப்படவுள்ளன.

முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் நாட்டுக்கு வரும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு முதலாம் நாள் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்படுவர்.

அதன் பின்னர், 11 முதல் 14 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனின் 14 நாட்கள் நிறைவடையும் போது, வீடுகளுக்கு செல்லலாம்.

அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அருகில் உள்ள சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு நாடு திரும்பும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு முதலாம் நாள் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், வீடுகளில் கட்டாய தடுமைப்படுத்தலை நிறைவு செய்யும் நிபந்தனையுடன் வீடு திரும்பலாம்.

மேற்படி 14 நாள் முடிவில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனின், அவர்களை வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க பொது சுகாதார அதிகாரிகளுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனுமதி பெற்று இராஜதந்திர மட்டத்தில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் பிசிஆர் பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தல் ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படாதவிடத்து, 11 முதல் 14 நாட்களுக்குள் இரண்டாவது பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்டு, அதிலும் தொற்று உறுதிப்படுத்தப்படாத போது, 14 ஆம் நாள் நிறைவில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டவர்களையும், அவர்கள் ஏற்றிக்கொண்ட தடுப்பூசி தொடர்பில் ஆராய்ந்து, முதலாவது பிசிஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.