அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வழி செய்யுமாறு கோரி, தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் மகஜர் கையளித்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்சவை தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்,உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளாக இருந்து அண்மையில் விடுதலையாகிய நபர்களும் சந்தித்து கலந்துரையாடினர்.
அவர்கள் கையளித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
கடந்த 22.06.2021 அன்று நாடாளுமன்றத்தில் மிக நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விசேட யோசனை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் ஆகிய நாம் வலி மிகுந்த வரவேற்பை வெளிப்படுத்துகின்றோம்.அதுமட்டுமன்றி உடனடியாகவே அமைச்சரின் யோசனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் முகமாக கடந்த 24 ஆம் திகதி 16 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பை வழங்கி விடுதலை செய்த ஜனாதிபதியின் செயற்கருமத்தை மனதார மெச்சுகின்றோம்.
உண்மையில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கின்ற அரசு ஒன்று சிறையில் வாடும் எமது உறவுகளின் வேதனையையும் அவர்களைப் பிரிந்து தவிக்கும் எமது கண்ணீரையும் புரிந்து கொண்டுள்ள விடயமானது எம்மனங்களில் நம்பிக்கையை விதைத்துள்ளது.
விடுதலை நாட்களை அண்மித்து சிறிய தண்டனைகளை அனுபவித்து வந்திருந்த ஒரு பகுதி அரசியல் கைதிகள் மாத்திரமே விடுவிக்கப்பட்டிருப்பினும் இதை ஒரு ஆரோக்கியமான முன்னெடுப்பாகவே நாம் காண்கின்றோம்.இந்த மனிதாபிமான விடுதலையின் தொடர்ச்சியாக பாரிய தண்டனைகளுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கும் வழக்கு விசாரணைகளுக்கு முகம் கொடுத்துள்ளவர்களுக்கும் விடுதலை விமோசனம் கிட்ட வேண்டும். அப்போதுதான் இனங்களுக்கிடையிலான சந்தேக மனப்பாங்கு சீரமைந்து நல்லிணக்கம் முழுமை பெறும்,நாடு செழிப்புறும்.
நடந்து முடிந்த போர் ஒரு நாட்டினுடைய இரு வேறு இனச் சமூகங்களுக்கும் பல கசப்பான பாடங்களை கற்பித்துள்ளது.போரின் சத்தங்கள் ஓய்ந்து 12 வருடங்கள் ஓடி மறைந்து கொண்டிருக்கின்ற நிலையில் இனிமேலும் பழி தீர்க்கும் படலத்தை விரித்துப் பசியாறத் துடிக்காது அனைவரும் பொறுப்புணர்ந்து பயணிப்பதே கால கட்டாயமாகின்றது.இதுவே உறவுகளை பிரிந்து தவிக்கும் தாயுள்ளங்களின் மொத்தப் பிரார்த்தனை ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.