ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னுடைய அதிகாரத்தை மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவின் விடுதலையில் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வடமராட்சி, முள்ளியில் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை அமைச்சர் நாமல் ராஜபக்சவால் திறந்துவைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“16 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை உண்மையில் மகிழ்ச்சியான ஒரு விடயம்.என்ன அடிப்படையில் மற்றவர்களை விடுதலை செய்யவில்லை என்பது எனக்கு தெரியவில்லை.ஆனால், துமிந்த சில்வாவை சாட்டோடு சாட்டாக விட்டது கண்டனத்துக்குரியது. இது நீதிமன்ற சுயாதீனத்தை கேள்விக்குட்படுத்துகின்றது. ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் பிள்ளைகளுடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அவரின் விடுதலைக்காக நாங்கள் குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.