ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக கூறி இறுதியாக மோசமான விமர்சனத்தை அவரே உருவாக்கிக் கொண்டு அவரது உரையை நகைப்புக்குரியதாக மாற்றிவிட்டார் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். தகுதி இல்லாத தலைமைத்துவத்தை நியமித்ததால் இன்று நாட்டின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரதேச சபைக்கு கூட போகாத ஒரு நபரை நாட்டின் தலைவராக்க வேண்டாம் என ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பிருந்தே நான் தெரிவித்து வந்தேன். அவ்வாறு ஒருவர் ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமாகும்.இராணுவத்தை இயக்குவது போன்று நாட்டை இயக்க முடியாது என பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளேன்.இன்று அதுவே இடம்பெற்று வருகின்றது.
அவரால் நாட்டின் பிரச்சினையை தீர்க்க முடிந்ததா?அவரது உரையினால் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு தீர்க்க முடியும். எரிபொருள் விலை உயர்வுக்கு அவரது உரை எவ்வாறான தீர்வை பெற்றுக் கொடுத்தது, கொவிட் பிரச்சினைக்கு என்ன தீர்வு கிடைத்துள்ளது. நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது பெரிய விடயம் அல்ல.தகுதி இல்லாத தலைமைத்துவத்தை நியமித்ததால் இன்று நாட்டின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.