July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை மீண்டுமொரு முடக்கத்திற்கு தயாராக வேண்டும்’; வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

உலக நாடுகளில் வேகமாக பரவிக் கொண்டுள்ள டெல்டா வைரஸ் தொற்றானது தற்போது டெல்டா பிளஸ் வைரஸாக மாற்றமடைந்து பரவல் அடையும் காரணத்தினால் அது குறித்து இலங்கையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

நாட்டின் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளமையானது ஆரோக்கியமானதல்ல, இப்போது பரவும் டெல்டா வைரஸ் நாட்டிற்குள் வேகமாக பரவ ஆரம்பித்தால் மீண்டும் பொது முடக்கத்திற்கு செல்லவேண்டி வரும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டின் கொவிட் நிலைமைகள், சுகாதார, வைத்திய நிபுணர்களின் நிலைப்பாடுகள் மற்றும் தற்போதுள்ள நாட்டின் நிலைமைகள் குறித்து கொவிட் செயலணி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இதன்போது நாட்டின் தற்போதுள்ள நிலையில் இறுதி இரண்டு நாட்களில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதை சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தரவுகளுடன் கூறியுள்ளார்.

கொவிட் வைரஸ் தொற்று குறித்த பாரிய அச்சுறுத்தல் நிலையொன்று இல்லை எனவும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் நாட்டில் தற்போதுள்ள கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டாலும் அதனை ஆரோக்கியமான நிலையென கருதி தீர்மானம் எடுப்பதில் பலவீனப்பட்டுவிடக்கூடாது.

தற்போது நாட்டில் டெல்டா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் மிக குறைவாக டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும் இரு வாரங்களில் அல்லது ஒருமாத காலத்தில் மிக வேகமான பரவல் நிலையொன்றை வெளிப்படுத்தலாம்.

இந்தியா இவ்வாறான நெருக்கடி நிலையொன்றுக்கே முகங்கொடுத்தது. எனவே சுகாதார அமைச்சு மற்றும் தொற்று நோய் தடுப்பு பிரிவு இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ துறையின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.

டெல்டா பிளஸ் A.Y 1 என்ற வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளில் பரவிக் கொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரேசில், பிரித்தானியா, அமெரிக்கா, சுவிஸ் உள்ளிட்ட மேலும் பல நாடுகளில் இந்த புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனவே இலங்கையிலும் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள காரணத்தினால் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் அடுத்த சில நாட்களில் மீண்டுமொரு முடக்கத்திற்கு செல்ல வேண்டி வரும் எனவும் விசேட வைத்தியர் சந்திம ஜீவந்தர உள்ளிட்ட வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோல் நாடு திறக்கப்பட்ட பின்னர் மக்கள் தமது வழமையான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவே பதிவாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவிக்கின்றது.

பொது போக்குவரத்தை பயன்படுத்துவதில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதையும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்கள் அடிப்படை சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதில் முழுமையாக திருப்தியடைய முடியாது எனவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.