July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்காதிருக்க தீர்மானம்

சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த ஒரு கைதியையும் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு பரிந்துரை செய்யாதிருக்க சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதனைச் சிறைச்சாலை ஊடக பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் எம்.பி துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் கைதிகள் பலர் தமது தண்டனையை குறைக்குமாறு வலியுறுத்தி கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே, சிறைச்சாலைகளின் கூரைகளில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் சிறை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தல், சிறைச்சாலை சொத்துகளை சேதப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு கைதியும் பொது மன்னிப்புக்கும் பரிந்துரைக்கப்பட மாட்டார்கள் என சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாறு செயற்பட்டு சிறைச்சாலை சொத்துக்களை சேதப்படுத்தும் கைதிகள் குறித்து சிறைச்சாலை திணைக்களம் கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு 10 வருடங்களுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் 260 கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கு ஆலோசித்து வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்திருந்தது.

பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 500 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர் என்று சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.