November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காலியில் இரகசியமான முறையில் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இம்மாத தொடக்கத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி மேல் மாகாணத்திலிருந்து காலிக்கு சென்ற ஒரு குழு  இரகசியமான முறையில் “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசி போட்டுக் கொண்டமை தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்தது.

இவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொண்ட 632 பேரில் 425 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இது தவிர காலியை சேர்ந்த 90 பேரும், எல்பிட்டி பிரதேச்தை சேர்ந்த 27, மாத்தறையை சேர்ந்த 9 பேரும் இதன் போது தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளனர்.

இந்த தடுப்பூசி வழங்கும் திட்டம் ஜூன்5 மற்றும்  7 ஆம் திகதி உனவடுனவில் உள்ள காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இதன் போது பல வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக ஊடகங்களில் சர்ச்சை எழுந்தது.

சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் சோதனை பிரிவின் அதிகாரிகளினால்  ஆரம்ப கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து இரகசியமான முறையில் தடுப்பூசி வழங்கிய குற்றச்சாட்டில் காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரியந்த ஜீவரத்ன மற்றும் காலி பிராந்திய தொற்று நோயியல் பிரிவின் அதிகாரி வேணுர குமார சிங்காராச்சி ஆகிய இருவரும் பணி மாற்றம் செய்யப்பட்டனர்.

நீதி மன்ற உத்தரவுக்கு அமைய தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளவர்கள் பொய்யான தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்தோடு வேண்டுமென்றே தெளிவற்ற விதத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் முகவரிகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரு தினங்களில் உனவடுனவில் தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களில் 67% பேர் மேல்  மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டில் “அஸ்ட்ரா செனிகா” தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக்கொண்டுள்ள ஆறு இலட்சம் பேருக்கு இரண்டாவது டோஸை செலுத்த வேண்டியுள்ளது.

நீண்ட காலமாக நிலவிவரும் “அஸ்ட்ரா செனிகா”தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு மத்தியில் உலக சுகாதார ஸ்தாபனம் 2 இலட்சத்து 64 ஆயிரம் டோஸ் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் ஜூலை முதல் வாரத்தில் இலங்கைக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாட்டில் மிகுதி 336,000 பேருக்கு “அஸ்ட்ரா செனிகா” தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.